செய்திகள்
புலி

நீலகிரி பந்திப்பூரில் 2 பேரை அடித்துக்கொன்ற புலி - மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

Published On 2019-10-14 12:28 GMT   |   Update On 2019-10-14 12:28 GMT
நீலகிரி பந்திப்பூரில் 2 பேரை அடித்துக்கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி, கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

இங்கு சவுடஹள்ளி பகுதியில் கடந்த 8-ந் தேதி மாடு மேய்த்த சிவலிங்கப்பா (வயது 55) என்பவரை புலி தாக்கி கொன்றது. ஏற்கனவே ஒருவரையும் இந்த புலி தாக்கி கொன்றதால் புலியை பிடிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 4 கால்நடை டாக்டர்கள் மேற்பார்வையில், வன ஊழியர்கள், போலீசார் இணைந்து 4 குழுக்களாக பிரிந்து, புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 120 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது. மேல்கம்மனஹள்ளி பகுதியில் புலியின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.இதனையடுத்து அதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக யானைகள் முகாம் மற்றும் மடிக்கேரி யானைகள் முகாமிலிருந்து, 8 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

போக்கு காட்டி வந்த புலியை, மகுவினாஹள்ளி அருகே சித்திக்காடு பகுதியில் கும்கி யானையுடன் சென்ற குழுவினர் நேற்று மாலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 7 வயதுடைய இந்த ஆண் புலியை, மைசூரு விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
Tags:    

Similar News