செய்திகள்

தனியார் வங்கியை கண்டித்து தஞ்சை பால் வியாபாரி ‘தர்ணா’

Published On 2019-04-25 18:13 IST   |   Update On 2019-04-25 18:13:00 IST
10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்த தனியார் வங்கியை கண்டித்து தஞ்சை பால் வியாபாரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் பால்பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதனை வீடு வீடாக சென்று சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் பால் வினியோகம் செய்து அந்த பணத்தை வங்கியில் செலுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பால் வியாபாரம் செய்த பணம் ரூ.1 லட்சத்தை கட்டுவதற்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். இதில் ரூ.99 ஆயிரத்திற்கு நோட்டுகளாகவும் மீதி ரூ.1000-க்கு 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்துள்ளார்.

அப்போது அதனை வாங்கிய வங்கி காசாளர் ரூபாய் நோட்டுகளை மற்றும் பெற்றுக்கொண்டு ரூ.10 நாணயங்களை முத்துகிருஷ்ணனிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் ஏன் ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்குறீர்கள்? என கேட்டார். அதற்கு ரூ.10 நாணயம் செல்லாது என வங்கி காசாளர் பதில் அளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி முத்துகிருஷ்ணன் வங்கிக்கு வெளியே வந்து வங்கி முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பால் வியாபாரிக்கு ஆதரவாக அங்கு அருகே உள்ள சில வியாபாரிகளும் குரல் கொடுத்தனர்.

இதனால் வங்கி முன்பு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பால் வியாபாரியிடம் வங்கி காசாளர் ரூ.10 நாணயங்களை வாரத்திற்கு ஒரு முறைதான் வாங்குவோம் என கூறியுள்ளார். எங்களிடம் ரூ.10 நாணயங்களை எண்ணுவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.

அதனை கேட்டு ஆத்திரம் அடைந்த முத்து கிருஷ்ணன், மற்ற வியாபாரிகளும் உங்களுடைய வேலையே பணத்தை எண்ணி வாங்குவதற்குதான். எந்திரத்தில் பணம் கட்ட தெரியாத எங்களை போன்ற வியாபாரிகள் சிலர் மட்டுமே வங்கிக்கு வந்து பணம் கட்டுகிறோம். இதனை கூட வாங்க உங்களால் முடியவில்லையா? என கடிந்து கொண்டனர்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் புகார் அனுப்புவோம் என்று வியாபாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.

பால் வியாபாரி வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News