செய்திகள்

மதகடிப்பட்டு வாரச்சந்தையில் திருடிய மாடுகளை விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2019-02-20 17:52 IST   |   Update On 2019-02-20 17:52:00 IST
மதகடிப்பட்டு வாரச்சந்தையில் திருடிய மாட்டை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டில் பசு மாடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவரது பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பசு மாடுகளை காணாமல் திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு சென்று தேடினார். அங்கு விஜயகுமாரின் 2 பசுமாடுகளையும் ஒருவர் வாங்கி வைத்திருந்தார்.

உடனே விஜயகுமார் அவரிடம் விசாரித்ததில் 2 பசு மாடுகளையும் ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், 2 பேர் மாடுகளை அவரிடம் விற்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மாட்டை விற்றவர்களிடம் செல்போனில் நைசாக பேசி அவர்களை அங்கு வரவழைத்தார்.

அவர்களை விஜயகுமாரும் மற்றவர்களும் சேர்ந்து மடக்கி பிடித்தனர். மேலும் கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் மரக்காணம் கூனிமேடு பகுதியை சேர்ந்த பாஷாவின் மகன் முகமதுஷாகில் (வயது19), புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த முகமது இலியாஸ் மகன் முகமதுஷாகில் (23)என்பதும் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.40 ஆ யிரத்தையும் பறிமுதல் செய்து மாடுகளை வாங்கியவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் 2 பசு மாடுகளையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உரிமையாளர் விஜயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News