செய்திகள்

கொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Published On 2019-01-18 10:59 GMT   |   Update On 2019-01-18 11:05 GMT
கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ‌சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். 

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.



விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டபடி, பிணைத் தொகை செலுத்தவில்லை. எனவே, இன்று மாலைக்குள் பிணைத் தொகையை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. #KodanadEstate #KodanadVideo
Tags:    

Similar News