செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ் - தொழிற்சங்கங்கள் முடிவு

Published On 2018-11-02 11:50 GMT   |   Update On 2018-11-02 11:50 GMT
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். #TNBusStrike #TNBus #TNBusStrike
சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் கொடுக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும்.

பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி, தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பாக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 22, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை இன்று பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், 12 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர், பொதுமக்களின் நலன்கருதி போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். #TNBusStrike #TNBus #TNBusStrike
Tags:    

Similar News