செய்திகள்

ஆதரவாளர்களுடன் கண்ணன் நாளை அவசர ஆலோசனை - புதிய கட்சி முடிவை அறிவிப்பாரா?

Published On 2018-09-11 09:48 GMT   |   Update On 2018-09-11 09:48 GMT
முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் நாளை மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #FormerMPKannan
புதுச்சேரி:

முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்து வந்தார்.

சமீப காலமாக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் எதிலும் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கண்ணன் மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் கண்ணன் நாளை மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார். அதில், விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த கண்ணன் மூப்பனார் தலைமையில் த.மா.கா. கட்சி உதயமானபோது அந்த கட்சிக்கு சென்றார்.

பின்னர் 2 தடவை தனியாக கட்சி தொடங்கி நடத்தி வந்தார். ஒவ்வொரு தடவையும் கட்சியை கைவிட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார்.

கடைசியாக காங்கிரஸ் கட்சியில் மேல்-சபை எம்.பி.யாக இருந்தார். பின்னர் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ராஜ்பவன் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகவும் களம் இறங்கினார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

இதன்பிறகு அ.தி.மு.க.விலும் அவர் எந்த கட்சி பணியிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இப்போது புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலின் போது இந்த கட்சி தேசிய கட்சிகள் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் இறங்கும் திட்டத்துடன் கட்சியை நடத்துவார் என கருதப்படுகிறது. #FormerMPKannan

Tags:    

Similar News