செய்திகள்

சேலம் அருகே ஐஸ் வியாபாரி மனைவியுடன் பலி- மொபட் மீது லாரி மோதியது

Published On 2018-08-22 10:36 GMT   |   Update On 2018-08-22 10:36 GMT
சேலம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஐஸ் வியாபாரி மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் வீராணத்தை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45), ஐஸ் வியாபாரி. இவரது மனைவி லதா (40).

இவர்கள் 2 பேரும் இன்று காலை தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளிப்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் ஐஸ் வியாபாரம் செய்ய மொபட்டில் சென்றனர்.

மொபட்டில் பின்புறம் ஐஸ் பெட்டியையும், முன்புறம் மனைவியையும் அமரவைத்தும் சண்முகம் வண்டி ஓட்டி சென்றார்.

ஆச்சாங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சென்றபோது, அந்த வழியாக பார்சல் ஏற்றிவந்த லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகமும், லதாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீராணம் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பார்சல் லாரியை ஓட்டிவந்த சேசன்சாவடியை சேர்ந்த ஏழுமலை என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான தம்பதிக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஆச்சாங்குட்டப்பட்டியில் ரோடு குறுகலாக உள்ளதாலும், சாலையோரம் பள்ளம் இருந்ததாலும், ஐஸ் வியாபாரி சண்முகம் மொபட்டை ரோட்டை விட்டு கீழே இறங்காமல் சென்றார். இதனால் லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  #tamilnews
Tags:    

Similar News