செய்திகள்

பொதுப்பணித்துறையில் நிலுவை தொகை ரூ.250 கோடியை உடனே வழங்க வேண்டும்- ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

Published On 2018-08-21 10:38 GMT   |   Update On 2018-08-21 10:38 GMT
புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.250 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:

புதுவை கட்டுமானர் (ஒப்பந்ததாரர்கள்) சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை சுமார் ரூ.250 கோடி வரை உள்ளது.

ஆனால், இந்த நிதியாண்டில் ரூ.55 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம்.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை காண்டிராக்டராகிய முகில் வண்ணன், பொதுப் பணித்துறையில் இருந்து வரவேண்டிய தொகை வராத காரணத்தினால் அவர் வெளியில் வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாமல் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே, முகில்வண்ணன் தற்கொலை செய்து கொண்டது போன்ற துயர சம்பவம் தொடராமல் இருக்க, புதுவை அரசு கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி பேர்க்கால அடிப்படையில் அவசரகால நிதியில் இருந்து மாத ஊதியத்தை வழங்கியது போல் ஒரு மாதத்துக்குள் நிலுவையில் உள்ள முழு தொகையையும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு ஒதுக்கிய குறைந்தபட்ச நிதியை கூட 20 நாட்கள் ஆகியும் பொதுப்பணித்துறையில் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதை ஓரிரு நாட்களுக்குள் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News