செய்திகள்

48 ஆண்டுகளாக தமிழ்மொழி கல்விக்கு ஏங்கும் பழங்குடி குழந்தைகள்

Published On 2018-08-06 16:57 IST   |   Update On 2018-08-06 16:57:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 48 ஆண்டுகளாக தமிழ்மொழி கல்வியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழங்குடி குழந்தைகளின் கனவை அரசு நிறைவேற்றி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம் கேர்மாளம் ஊராட்சி பூதாளபுரத்தில் 1970ஆம் ஆண்டு தொடக்கபள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க கன்னட வழிப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

பூதாளபுரம் தொடக்கப்பள்ளிக்கு பூதாளபுரம், ஒரத்தி, உருளிகுட்டை, வி.எம்தொட்டி மற்றும் கெரெதொட்டி ஆகிய ஐந்து குடியிருப்புகளிலிருந்தும் 19 குழந்தைகள் படித்துவருகின்றனர் இதில் பூதாளபுரம் தவிர நான்கு கிராமங்களிலும் பழங்குடி மக்கள் வசிக்கின்ற குடியிருப்புகளாகும். 19 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் மட்டும் கன்னடம் மொழி பயிலும் குழந்தைகள்.

இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடம் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு செல்ல வேண்டுமாயின் 70 கி.மீ. தொலைவில் உள்ள தாளவாடிக் குத்தான் செல்லவேண்டும். ஆகவே, இதற்கு பதிலாக ஐந்து கி.மீ தொலைவில் கர்நாடகாவில் உள்ள உடையார்பாளையத்தில் சேர்த்துவிடுகின்றனர்.

அதுவும், இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடம் படித்தவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு அனுப்புவதை விரும்பாமல், தொடக்கப்பள்ளி முதலே கர்நாடகவில் உள்ள உடையார்பாளையம் பள்ளியில் சேர்த்து படித்து வைக்கின்றனர் பூதாளபுர குழந்தைகளின் பெற்றோர்கள்.

மீதமுள்ள 12 குழந்தைகளும் பழங்குடி குழந்தைகள். இக்குழந்தைகள் தமிழ்வழியில் பயில ஏங்குகின்றனர். இவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கன்னட வழிப்பள்ளி என்பதால் இந்த 19 குழந்தைகளுக்கும் கன்னட வழியில் போதிக்க ஒரு தலைமையாசிரியரும், உடன் ஒரு இடைநிலை ஆசிரியரும் ஆக, இரண்டு கன்னட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இக்குழந்தைகளுக்கு தமிழ்வழியில் போதிக்கத்தெரியாததால், இக்குழந்தைகள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

இந்த நான்கு பழங்குடி கிராம பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தமிழில் பயில ஏதுவாக இங்கு தமிழ்வழிப்பள்ளி தொடங்கப்படவேண்டும் என கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் இப்பிரச்சினை தெரியும் ஆனால், தீர்வுதான் எட்டப்படவில்லை.

இப்பள்ளிக்கு அடுத்து தமிழ்வழியில் இவர்கள் பயில வேண்டுமாயின், இதற்கு அடுத்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் கேர்மாளம் உயர்நிலைப்பள்ளி தான் அமைந்துள்ளது. ஆக, இந்த பூதாளபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உடனடியாக தமிழ்வழிப்பள்ளி தொடங்கப்படவேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

இந்த பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. ஆகவே, இவர்களுக்கு வாழிடத்தில் கல்வி வழங்கப்படவேண்டுமென தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சுடர் அமைப்பு ஆகிய கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனும் கதையாக, வாழிடத்தில் பள்ளியிருந்தும் பயனில்லாமல் தவிக்கின்றனர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் பிரிதொன்றறியோம் என்று தமிழ்மொழியின் பெருமை பேசும், செம்மொழி அந்தஸ்தை பெற்ற இந்த தமிழ் ஏன் பழங்குடி குழந்தைகளுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது? இந்த பழங்குடி குழந்தைகளின் தமிழ்க்கனவு என்று நிறைவேறும்..?
Tags:    

Similar News