செய்திகள்

மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் உதவித் தொகையை வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை

Published On 2018-08-06 10:43 GMT   |   Update On 2018-08-06 10:43 GMT
மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் உதவித் தொகையை வழங்கக்கோரி அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், கைம்பெண் ஆகியோருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகையை முறைகேடாக பலர் பெற்று வருவதாக கவர்னர் கிரண்பேடிக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி உதவித்தொகை பெறும் பயனாளிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். தகுதியற்றவர்கள் எனக் கூறி தொகுதிதோறும் பலரை நீக்கியுள்ளனர். அதிகபட்சமாக உப்பளம் தொகுதியில் ஆயிரத்து 300 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும் என அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தி வந்தார். ஆனால், கடந்த சில மாதமாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து இன்று சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்திற்கு அன்பழகன் வந்தார். அவரோடு பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளும் வந்திருந்தனர்.

அவர்கள் அலுவலகத்தின் நுழைவு வாயில், படிக்கட்டுகளில் அமர்ந்து முற்றுகையிட்டனர். உதவித் தொகையை வழங்கக்கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News