செய்திகள்

ஈரோட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் 5 அடிக்கு உயர்த்தப்படும் அடுக்குமாடி வீடு

Published On 2018-08-06 13:48 IST   |   Update On 2018-08-06 13:48:00 IST
ஈரோட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் 5 அடிக்கு உயர்த்தப்படும் அடுக்குமாடி வீட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஈரோடு:

ஈரோடு தில்லைநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). ஜவுளி உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

இவர் தில்லைநகரில் 2 தளமுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மழை காலங்களில் இந்த வீட்டுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டது.

எனவே வீட்டை அஸ்தி வாரத்தில் இருந்து 5 அடி உயரம் உயர்த்த முடிவு செய்தார். இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்துகிறார். இந்த தொழில்நுட்பத்துடன் அஸ்திவாரத்தை 5 அடிக்கு உயர்த்தும் பணி கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.

இந்த பணியின் தொடக்கமாக கட்டிடத்தை சுற்றி அஸ்திவார பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் தரைதள கட்டிட பகுதியில் 1 அடிக்கு உடைக்கப்பட்டு அதில் ஜாக்கிகள் பொருத்தப்பட்டன.

மொத்தம் 2 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவுள்ள இந்த கட்டிடத்தை 5 அடிக்கு உயர்த்தும் வகையில் 1200 ஜாக்கிகள் பொருத்தப்பட்டன. பின்னர் அந்த ஜாக்கிகளை சிறிது சிறிதாக உயர்த்தி கட்டி கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்தப்பட்டு வருகிறது. இன்னும் 10 அல்லது 15 நாளில் இந்த பணி முடிவடையும் என்று தெரிகிறது.

இது பற்றி தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

நான் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறேன். வேளச்சேரியில் இதுபோன்று 2 அடுக்குமாடி கட்டிடங்களின் உயரத்தை உயர்த்தி உள்ளேன்.

இந்த தொழில்நுட்பம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். தமிழகத்தில் சென்னை, மதுரையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது அஸ்திவார பகுதியில் ஜாக்கிகள் பொருத்தப்பட்டு அவற்றின் உதவியுடன் 5 அடிக்கு உயர்த்தும் பணி நடக்கிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டதும் அஸ்திவாரத்தில் ஏற்படும் வெற்றிடம் கான்கீரிட் கற்கள் மூலம் நிரப்பி கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பணி இன்னும் நடந்து வருகிறது. வெளிநாட்டில்தான் இந்த யுக்திகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டில் முதன் முறையாக நடந்து வரும் அடுக்குமாடி வீடு உயர்த்தப்பட்டு வருவதை பலர் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
Tags:    

Similar News