செய்திகள்

சேலத்தில் நள்ளிரவில் டிராவல்ஸ் அதிபரை தாக்கி காரை கடத்திய வட மாநில கும்பல் யார்?

Published On 2018-08-06 05:58 GMT   |   Update On 2018-08-06 05:58 GMT
சேலத்தில் நள்ளிரவில் டிராவல்ஸ் அதிபரை தாக்கி காரை கடத்திய வட மாநில கும்பல் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 33). டிராவல்ஸ் அதிபரான இவர் காரையும் ஓட்டி வந்தார்.

நேற்று புதுச்சேரிக்கு காரை ஓட்டி சென்ற உமா பதியிடம் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கும்பல் கேரள மாநிலம் கொச்சிக்கு செல்ல வேண்டும் கார் வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டனர்.

உடனே வாடகையை பேசிய உமாபதி அவர்கள் சம்மதித்ததால் காரில் ஏற்றி கொண்டு சேலம் வழியாக கொச்சிக்கு புறப்பட்டார். கார் நள்ளிரவில் சேலம் கொண்டலாம்பட்டி மேம்பாலப்பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது காரில் இருந்த கும்பல் திடீரென உமாபதியை சரமாரியாக தாக்கியது. இதில் நிலை குலைந்த உமாபதியை கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சாலையோரம் தள்ளி விட்டு காரை கடத்தி சென்றது. இதனால் செய்வதறியாது திகைத்த உமாபதி கதறினார்.

பின்னர் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் கமி‌ஷனர் சங்கர் மாநகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி அந்த காரை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் அந்த கார் சிக்கவில்லை.

இதனால் போலீசார் உமாபதியை தாக்கி விட்டு காரை கடத்தி சென்ற வட மாநில வாலிபர்கள் யார், யார்?, எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கடத்தப்பட்ட கார் காரிப்பட்டி பிரிவு ரோட்டில் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் சாலையோரம் கார் நிறுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும் கடத்தம் கும்பல் குறித்தும் உறுதியாக எந்த தகவலும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News