செய்திகள்

கோவில் பிரசாதங்களுக்கும் உணவு தர முத்திரை கட்டாயம்- இந்து அறநிலையத்துறை உத்தரவு

Published On 2018-07-13 13:13 IST   |   Update On 2018-07-13 13:13:00 IST
அனைத்து கோவில்களிலும் தர முத்திரை பெற்ற பிறகே பிரசாதங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை கோவில் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

பொட்டலம் செய்து விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் முத்திரை பதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கட்டாய விதிமுறைகள் உள்ளது.

ஆனால், கோவில்களில் வழங்கப்படும் பிரசாத பொட்டலங்களில் இந்த முத்திரை இருப்பதில்லை. சாமிக்கு படைத்து விட்டு பின்னர் அவற்றை விற்பனைக்கு அனுப்புவதால் தர முத்திரை பெறுவது சாத்தியம் இல்லாததாக இருந்தது.

தற்போது பழனி கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு இந்த தர முத்திரை பெறப்படுகிறது.

இதேபோல் அனைத்து கோவில்களிலும் தர முத்திரை பெற்ற பிறகே அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை கோவில் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 47 கோவில்களில் இவ்வாறு பிரசாதங்களை பொட்டலமிட்டு விற்று வருகிறார்கள்.


இந்த கோவில்கள் அனைத்தும் தர முத்திரையை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய உணவு தர ஆணையத்திடம் இருந்து தர முத்திரை பெற வேண்டுமென்றால் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு தான் இந்த முத்திரை வழங்கப்படும்.

தயாரிக்கப்படும் பிரசாதங்கள் குறிப்பிட்ட நிர்ணயப்படி தரமானதாக இருந்தால் தான் அதற்கான முத்திரையை வழங்குவார்கள்.

இதனால் பக்தர்களுக்கு தரமான பிரசாதம் கிடைப்பதற்கு உத்தரவாதம் ஏற்படும்.

பெரும்பாலான கோவில்களில் பிரசாதங்களை தயாரித்து கொடுப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை அங்குள்ள ஆலய மட பள்ளியில் வைத்து தயாரித்து வழங்க வேண்டும்.

அதற்காக மட பள்ளியில் பாரம்பரியமாக உணவு தயாரிக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் உணவு தர அமைப்பு வழங்கும். #TemplePrasadam
Tags:    

Similar News