செய்திகள்

நகை கடை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை-ரூ.2 லட்சம் கொள்ளை: வேலைக்கார பெண் கைது

Published On 2018-06-25 22:35 IST   |   Update On 2018-06-25 22:35:00 IST
காயல்பட்டணம் நகை கடை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் ஆறாம்பள்ளி தெருவை சேர்ந்தவர் வாவு அப்துல்சலாம். இவருடைய மனைவி பாத்திமுத்து (வயது 78). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் நகைக்கடை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாவு அப்துல்சலாம் இறந்து விட்டார். இதனால் பாத்திமுத்து மற்றும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் கப்பார் (80) ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகம்மது அசன். இவரது மனைவி கதிஜா (49). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கதிஜா கணவனை பிரிந்து வசித்து வந்தார். மேலும் பாத்திமுத்து வீட்டின் வேலைகளை கவனித்து வந்தார்.

இவர் தினமும் இரவு 9 மணிக்கு பாத்திமுத்து வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலை 8 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பி வருவது வழக்கம். வீட்டில் ஒருவர் போல கதீஜா பழகி வந்தார். இதனால் பாத்திமுத்துவின் வீட்டில் நகை இருக்கும் இடங்கள் மற்றும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கதிஜா தனது வீட்டிற்கு நேற்று காலையில் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பின்னர் பாத்திமுத்து தனது பீரோவை திறந்தார்.

அப்போது, அங்கு இருந்த நகைகள் சில மாயமாகி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதே பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் இஷாக் அகமது உதவியுடன் வெளிநாட்டில் இருக்கும் மகன்களிடம் நகைகளின் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது, பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளும், ரூ.2 லட்சமும் கொள்ளைபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் இஷாக் அகமது புகார் செய்தார். புகாரில் வீட்டு வேலைக்கார பெண்ணான கதிஜா நகை, பணத்தை எடுத்து சென்று இருக்கலாம் என்றுகூறியிருந்தார். இதையடுத்து போலீசார் கதீஜாவை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கதீஜா நகை, பணத்தை திருடியது உறுதியானது.

இதையடுத்து கதீஜாவை போலீசார் கைது செய்தனர். திருடிய நகைகளை கதீஜா அப்பகுதியில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். இதனிடையே கைதான கதிஜா அங்கு வேறு ஏதும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News