வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் முதியவர் பிணம்
புதுச்சேரி:
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது. கோவில் காவலாளி காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
கோவில் குளத்தை காவலாளி சுற்றி வந்து பார்த்த போது குளத்தில் முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டார். உடனே இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த முதியவர் வில்லியனூர் புதுநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் (வயது 80), தச்சுத்தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர், குளத்தில் கால் கழுவ சென்றபோது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.