செய்திகள்

ஜவுளி வியாபாரியை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2018-05-16 03:14 GMT   |   Update On 2018-05-16 03:14 GMT
ஜவுளி வியாபாரியை தாக்கியது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அலி அக்பர். ஜவுளி வியாபாரி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு என் மீது மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நான், கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், என்னிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இல்லாதபட்சத்தில் என் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க மறுத்த என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டி தாக்கினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சரவணன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News