செய்திகள்

கடலூரில் நகராட்சி அதிகாரி மீது தாக்குதல்: துப்புரவு பணியாளர்கள் சாலைமறியல்

Published On 2017-12-29 19:43 IST   |   Update On 2017-12-29 19:43:00 IST
நகராட்சி அதிகாரி மீது தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்:

கடலூர் முதுநகர் வசந்தராம்பாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டுவதற்கு நகராட்சியிலிருந்து சரியாக பணம் வழங்கப்படவில்லை என்பதால் இந்த கழிப்பறை கட்டி முடித்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இந்தநிலையில் இன்று காலை நகராட்சி அதிகாரி உத்தரவின்பேரில் நகராட்சி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துப்புரவு பணியாளர் ஜெய்சங்கர் உள்பட நகராட்சி பணியாளர்கள் வசந்தராம் பாளையத்தில் உள்ள கழிப்பறை கட்டிட பூட்டை உடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.பிரமுகர் ஒருவர் இன்னும் கழிப்பறை கட்டியதற்கான பணம் நகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. அதற்குள் எதற்காக கழிப்பறை பூட்டை உடைத்து சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டார்.

இதில் அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நகராட்சி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், துப்புரவு பணியாளர் ஜெய்சங்கர் ஆகிய 2 பேரையும் அ.தி.மு.க.பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் நகராட்சியில் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்களும் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

பின்னர் நகராட்சி ஊழியர்களை தாக்கிய அ.தி.மு.க.பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியரை தாக்கிய அ.தி.மு.க.பிரமுகரை கைது செய்யும் வரை எந்தவித பணியும் செய்யமாட்டோம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் கூறினர்.

இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News