செய்திகள்

கோவிலுக்கு சென்ற போது பெண்ணை காட்டு யானை தூக்கி வீசியது

Published On 2017-12-29 10:36 GMT   |   Update On 2017-12-29 10:36 GMT
காரமடை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணை காட்டு யானை தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கெண்டே பாளையத்தை சேர்ந்தவர் பொன்னு சாமி (56). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜாமணி (48).இன்று அதிகாலை 5.15 மணிக்கு பொன்னுசாமி தனது மனைவி மற்றும் பேத்தி பிரியதர்ஷினி (8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட புறப்பட்டார்.அதிகாலை 5.30 மணியளவில் கெண்டே பாளையம் - சாலையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் ஒரு காட்டு யானை ரோட்டை கடந்து செல்ல வந்தது. இதனை பார்த்ததும் பொன்னுசாமி அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி தப்பி செல்ல முயன்றார். அவர்களை காட்டு யானை துரத்தியது. திடீரென அந்த காட்டு யானை மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து இருந்த ராஜாமணியை துதிக்கையால் தூக்கி கீழே வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிளும் நிலை தடுமாறி விழுந்ததில் பொன்னுசாமி, அவரது பேத்தி பிரியதர்ஷினி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து யானையை காட்டுக்குள் விரட்டினார்கள்.

படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து காரமடை வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரமடை பகுதியில் காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News