செய்திகள்

நெய்வேலி அருகே பஸ் மோதி வேன் டிரைவர் பலி

Published On 2017-12-29 16:04 IST   |   Update On 2017-12-29 16:04:00 IST
நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில்நேற்று மாலை குமார் வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

கொம்பாடிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகே குமார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கடலூரிலிருந்து - விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட குமார் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யபட்டது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இறந்த குமாருக்கு கவுரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News