கோபி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல் அட்டகாசம்: ஒருவன் சிக்கினான்
கோபி:
கோபி மொடச்சூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 43). இவர் கடந்த 10-ந் தேதி கோபியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு தனது நண்பரின் மகன் திருமணத்திற்காக தனது பைக்கில் வந்தார்.
அதை மண்டபத்தின் முன்பு நிறுத்திவிட்டு, பின்னர், வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. கோபியை அடுத்த நஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவரும் கடந்த 10-ந் தேதி நல்லகவுண்டம் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை.
அதேபோல், கோபி பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (43). இவர் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி காலை தனது பைக்கை தினசரி மார்க்கெட்டில் அருகில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது பைக்கை காணவில்லை.
அப்போது ஒரு வாலிபர் அந்த பைக்கை திருடிக் கொண்டு செல்வதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் கோபி அருகேயுள்ள பூதிமடைப் புதூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(29) என தெரிய வந்தது. போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.