ஈரோடு-கோபி-பவானி ரேசன் கடைகள் முன் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் ஒழுங்காக கிடைப்பதில்லை என கூறி அதை கண்டித்தும், பொருட்கள் தட்டு பாடின்றி வழங்க கோரியும் தி.மு.க.வினர் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாட்ட தி.மு.க. சார்பில் 400 ரேஷன் கடைகளில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி அலுவலகம் முன்பு உள்ள ரேஷன் கடையில் முற்றுகை போராட்டம் நடந்தது .
தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்து சாமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இது தவிர ஈரோடு மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் ரேஷன் கடைகள் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது .
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காத போதும் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஈரோடு கோட்டை பகுதி ரேசன் கடைமுன் கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைச் செயலாளர் பாலசுந்தரம், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ள ரேசன் கடை முன்பாக ரேஷன் கடை பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஜி.பி.வெங்கிடு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சரவணன் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் கள்ளிப்பட்டி பாலு, இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உதயகுமரன், மகிளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்ரா விஸ்வநாதன், நகர தி.மு.க செயலாளர் நாகராஜன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதே போல் பவானியில் காவேரி வீதியில் உள்ள ரேசன் கடையில் தி.மு.க. வினர் நகர செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தி.மு.க. தொண்டர்கள், பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.