செய்திகள்
மஞ்சு விரட்டில் பங்கேற்க வந்த மாடுகள்.

குயிலாப்பாளையத்தில் மஞ்சு விரட்டை கண்டு களித்த வெளிநாடு சுற்றுலா பயணிகள்

Published On 2017-01-16 11:01 GMT   |   Update On 2017-01-16 11:01 GMT
குயிலாப்பாளையத்தில் நடைபெற்ற மஞ்சு விரட்டை வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
சேதராப்பட்டு:

தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மஞ்சு விரட்டை இந்த ஆண்டும் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

அதைத்தொடர்ந்து குயிலாப்பாளையம் மந்தை திடலில் உள்ள அய்யனாரப்பன் கோவில் முன்பு உழவு வேலைக்கு பயன்படுத்தப்படும் காளைகள் மற்றும் பசு மாடுகளை அப்பகுதி விவசாயிகள் குளிப்பாட்டி அலங்கரித்து கொண்டு வந்தனர். அதேபோல் மாட்டு வண்டிகளும் கொண்டு வரப்பட்டன.

மஞ்சு விரட்டை காண குவிந்திருந்த வெளிநாட்டினரில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

பின்னர், கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு படைத்த பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை மாடுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

பிறகு தாரை, தப்பட்டையுடன் நடன நிகழ்ச்சி நடந்தது. வண்ண, வண்ண பொடிகளை தூவி உற்சாகமுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டினர், பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி-சட்டை, சேலைகளை அணிந்திருந்தனர்.

நடன நிகழ்ச்சிக்கு பிறகு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காளை மாடுகள் கலந்து கொண்டன. மஞ்சு விரட்டை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கண்டு களித்தனர். அப்பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளில் நின்றவாறும் மஞ்சு விரட்டை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

Similar News