செய்திகள்

மு.க. ஸ்டாலின் படத்தை எரிக்க முயற்சி: ம.தி.மு.க.வினர் 75 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

Published On 2016-12-19 19:48 IST   |   Update On 2016-12-19 19:48:00 IST
கருணாநிதியை விசாரிக்க சென்ற வைகோ கார் மீது கல், செருப்பு வீசியதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை எரிக்க முயன்ற ம.தி.மு.க.வினர் 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:

சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கார் மீது கல், செருப்பு வீசியதற்கு கண்டனம் தெரிவித்தும், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத்சந்திரா, கிறிஸ்டின் ராணி, சுமேஷ், மகாராஜ பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை ம.தி.மு.க. வினர் எரிக்க முயன்றனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஸ்டாலின் உருவப்படத்தை கிழித்து நடுரோட்டில் வீசினர். கோஷங்களையும் எழுப்பினார்கள்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறித்து நேசமணிநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரிசித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உள்பட 75 பேர் மீது 143, 188 என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News