செய்திகள்
திடீர் பிரேக் போட்டதால் வேன் கம்பியில் மோதி பள்ளி மாணவன் பலி: டிரைவர் கைது
திடீர் பிரேக் போட்டதால் வேன் கம்பியில் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவான்மியூர்:
மேடவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம், இவரது மகன் கேசவராஜ் (7), அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இன்று காலையில் கேசவராஜை பள்ளியில் விடுவதற்காக பாரதிதாசன் வேனில் ஏற்றி சென்றார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சென்ற போது பாரதிதாசன் திடீர் பிரேக் போட்டார்.
இதனால் கேசவன் முன்னால் இருந்த சீட்டின் கம்பி மீது பலமாக மோதினான். இதில் அவனது தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவனை சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கேசவராஜ் இறந்தான்.
இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் பாரதிதாசனை கைது செய்தனர்.