செய்திகள்

கொடுமுடியில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய வாலிபர்: 3 பேர் மீது மோதியதால் பரபரப்பு

Published On 2016-07-10 18:07 IST   |   Update On 2016-07-10 18:07:00 IST
கொடுமுடியில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய வாலிபர் 3 பேர் மீது மோதியதால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.
கொடுமுடி:

நாமக்கல்லை சேர்ந்தவர்கள் ஷிஜேந்திரன் (வயது 22). விவேக் (21) பொள்ளாச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் (22). வாலிபர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 4 பேர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நடந்த நண்பர் திருமணத்தில் கலந்து கொள்ள காரில் வந்தனர். திருமணம் முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட 3 பேரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு காரில் ஏறினர் காரை ஷிஜேந்திரன் ஓட்டினார். அப்போது அவர் போதையில் இருந்து உள்ளார்.

கொடுமுடி ரெயில்வே நிலையம் முன் இவர்களின் கார் தாறுமாறாக சென்றது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரர் மீது கார் மோதி அவரை தூக்கி வீசியது. படுகாயத்துடன் அவர் துடித்தார்.

பிறகு அந்த கார் கொடுமுடி ஊருக்குள்ளும் தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி (50) வடிவேல் (33) ஆகிய தாய்-மகன் மீதும் கார் மோதியது. இதில் தாயும்-மகனும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இரவு 8.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கொடுமுடி போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். போலீசாருடன் பொதுமக்களும் சேர்ந்து தாறுமாறாக ஓடிய காரை விரட்டிச் சென்றனர். 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்ற போலீசார் நொய்யல் செக் போஸ்ட் அருகே காரை மடக்கி பிடித்தனர்.

அப்போது காரில் இருந்து 4 பேரும் குதித்து தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் ஓடிவிட்டார். ஷிஜேந்திரன், விவேக், முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

தாறுமாறாக காரை ஓட்டிச்சென்ற 3 பேரையும் பொதுமக்கள் அடித்து உதைத்தனர். போலீசார் அவர்களிடமிருந்து மீட்டு 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மோதி படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Similar News