செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணி போட்டியிடும்: வைகோ பேட்டி

Published On 2016-07-09 09:52 IST   |   Update On 2016-07-09 09:52:00 IST
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணி போட்டியிடும் என்று ஈரோட்டில் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஈரோடு:

ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ நேற்று ஈரோடு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ஊழல்-பணத்துக்கும் இடையே நடந்த தேர்தல். 2 கட்சிகளும் பணத்தை வாரி இறைத்தன. பணத்துக்காக ஓட்டு விலை பேசப்படுவது-வாக்கு சீட்டுகளுக்கு விலை பேசப்படும் நிலை அரசியல் தர்மம், அரசியல் அறம் ஆகியவற்றை அழித்துவிட்டது.

மக்கள் நல கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகளும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடும்.

தமிழகத்தில் நடந்து வரும் படுகொலைகள் பெண் குழந்தைகள் வெளியே சென்று வருவது என்பது அச்சத்துக்கு உரியதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், செல்போன்களில் பார்க்கும் படங்கள் என்று பல உள்ளன.

இருப்பினும் இதற்கான பிரதான காரணமாக இருப்பது மது அரக்கன் தான். எனவே முழு மதுவிலக்கு என்பது இன்றியமையாதது. 2 மணி நேரம் குறைப்பு, 500 மது கடைகள் அடைப்பு என்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்.

தமிழக வக்கீல்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கொண்டு வந்த சட்டதிருத்தம் வக்கீல்களின் தொழிலையே பாதிக்கும். எனவே அவர்களின் அறவழியிலான போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது.

முல்லை, பெரியாறு பிரச்சினை, காவிரியில் கர்நாடகம் அணைகட்டும் பிரச்சினை போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழகத்தின் பரிதாபமான நிலையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News