பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்த வட்டியில் கடன்: நாகை கலெக்டர் தகவல்
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமபுறமாயின் 98 ஆயிரம் மற்றும் நகர்புறமாயின் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு அடைந்தவராகவும், 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் 1 நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மகளிர் திட்ட அலுவலகத்தில் மதிப்பீடு பெற்ற சுய உதவிக்குழுக்களுக்கு தொழிற்கடன் வழங்கப்படும்.
சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள், விவசாயம், போக்குவரத்து, கைவினைஞர் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள், இளம் தொழிற்பட்டதாரிகள் சுயதொழில், தொழிற்கல்வி பயிலுதல் போன்ற தொழில்களுக்கு இக்கடன் வழங்கப்படும்
கடன் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படும். கடன் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் தொழில் சார்ந்த திட்ட வரைவறிக்கை ஆகியவற்றின் நகல்களுடன் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்: 22–ல் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்பட்டு தகுதியிருப்பின் கடன் தொகை சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் இதனை கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.