செய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

Published On 2017-03-22 23:05 IST   |   Update On 2017-03-22 23:05:00 IST
இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.
சென்னை:

இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார்.

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்சியில் கலந்து கொள்கின்றனர். ‘2.0’ படம் வெளிவரும் போது ஏதேனும் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Similar News