செய்திகள்

தி.மு.க.-ம.தி.மு.க. நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது: வைகோ

Published On 2018-03-01 07:56 GMT   |   Update On 2018-03-01 07:56 GMT
தி.மு.க.-ம.தி.மு.க. ஆகிய இயக்கங்களுக்கு இடையிலும் தொண்டர்களுக்கு இடையிலும் ஒரு சரியான ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். #vaiko
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது வைகோ  நிருபர்களிடம் கூறியதாவது:-

13 ஆண்டுகள்  கழித்து அறிவாலயத்துக்கு சென்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன்.

அவருக்கு  பட்டாடை போர்த்தி, மலர்மாலை சூடி திருக்குறள் புத்தகத்தை வழங்கினேன். அதன் முதல் பக்கத்தில் இந்த நன்நாளில் நீங்கள்  பல்லாண்டு, பல்லாண்டு வாழிய, பல்லாயிரம் துறை கண்டு வாழிய, தமிழகத்தின் ஆட்சி மகுடம் ஏந்தி வாழிய,  திராவிட இயக்கத்தை முற்றுகையிடும் பகைவர்களை வீழ்த்திடும் தளபதியாக நலம் பெற்று வாழிய என்று எழுதி உள்ளேன்.


அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மிக மனமகிழ்ச்சியாக உள்ளது. அவரது பிறந்த நாளையொட்டி நேற்றைய தினம் பெரியார் திடலில் நடைபெற்ற  இளைஞர் எழுச்சி நாள் கூட்டத்தில் உள்ளம் திறந்து பேசி உள்ளேன்.

இன்று  அனைவரும் மனமகிழ்வோடு வந்தோம். தி.மு.க. முன்னணியினரும், மாவட்டச் செயலாளர்களும், தோழர்களும், எங்களை அன்புடன் வரவேற்றனர்.

எனவே  இந்தநாள் எங்களை பொறுத்தமட்டில் 2 இயக்கங்களுக்கு இடையில் தோழர்களுக்கு மத்தியில் நிர்வாகிகளிடையே ஒரு சரியான ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நான் நேற்றும் கண்டேன். இன்றும் கண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News