செய்திகள்

அனைத்துகட்சி கூட்டத்தை தி.மு.க. கூட்டினால் பா.ஜனதா பங்கேற்காது: தமிழிசை பேட்டி

Published On 2016-10-15 12:50 IST   |   Update On 2016-10-17 16:52:00 IST
தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா கலந்து கொள்ளாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அக்கறையாக நடக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. மத்திய அரசு சட்ட திட்டத்துக்கு உட்பட்டுதான் அணுக முடியும். தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தி.மு.க.-காங்கிரஸ் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் காரணத்துக்காகத்தான் என்பதை துணிச்சலாக சொல்கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன செய்ய போகிறார்கள்? தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா அதில் பங்கேற்கும்.

தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா கலந்து கொள்ளாது. இது அவர்களுடைய பொறுப்பு அல்ல. தமிழக அரசின் பொறுப்பு.

முதல்-அமைச்சர் உடல் நலகுறைவால் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தண்ணீர் பெற்று தந்தது உண்மைதான்.

மத்திய அரசு கண்டிப்பாக காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு நல்லது செய்யும்.

காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News