ரீத்தாபுரம் புனித ரீத்தம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- விழாவானது 28-ந்தேதி வரை நடக்கிறது.
- 9-ம் நாள் திருவிழாவில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
ரீத்தாபுரம் புனித ரீத்தம்மாள் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று மாலை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அன்பிய திருக்கொடி பவனி நடைபெற்றது. அதைதொடர்ந்து நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜேசுதாசன் தலைமை தாங்கினார்.
பங்கு பேரவை துணைத்தலைவர் ஜெயசேகர், செயலாளர் அருள் ஆன்றனிராஜ், துணை செயலாளர் மரியலூயிஸ், பொருளாளர் சுனிதா அகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி, கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கு பேரவையினர், அன்பிய ஒருங்கிணையம், பக்த சபைகள், பங்கு மக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 4-ம் நாள் ரோஜாமலர் பவனி, வாகனங்கள் மந்திரிப்பு நிகழ்ச்சியும், 9-ம் நாள் திருவிழாவில் ஆடம்பர தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நிறைவேற்றி மறையுறையாற்றுகிறார். 10-ம் நாள் விழாவில் காலை 10.30 மணிக்கு தேர்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.