ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை இன்று நடக்கிறது

Published On 2018-12-14 03:29 GMT   |   Update On 2018-12-14 03:29 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை இன்று நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். மேலும், ஆண்டிற்கு 3 முறை வலியபடுக்கை பூஜை நடைபெறும்.

இந்த பூஜையின்போது நள்ளிரவு அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்களை அம்மன் முன் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள். இந்த பூஜை மாசி கொடையின் 6-ம் நாள், பரணிக்கொடை மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடைபெறும்.

அதன்படி, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாள பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. 
Tags:    

Similar News