ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி பூஜையை இல்லத்தில் கொண்டாடும் முறை

Published On 2018-09-01 08:54 GMT   |   Update On 2018-09-01 08:54 GMT
கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். நாளை கிருஷ்ண ஜெயந்தி பூஜையை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கிருஷ்ணர் நடு இரவில் அவதரித்ததால், இவருக்கான பூஜையை நடு இரவில் செய்வது நல்லது. என்றாலும் காலம் மற்றும் நேரம் கருதி பலரும் இரவு வேளையிலேயே பூஜையை முடித்து விடுவதுண்டு. வீடு முழுக்கக் கழுவி சுத்தம் செய்து விட்டு, வாசல் படியில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் பிஞ்சு பாதங்களை மாக்கோலத்தால் வரைய வேண்டும்.

அதாவது, கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் இல்லத்து பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம். பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து பொட்டு இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான மங்களப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ போன்ற வற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களை உளமாரச் சொல்லுங்கள். ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரி பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் மேல் அர்ச்சிக்க வேண்டும். மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை, நேரம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லி வழிபட்டாலும் சரிதான். பூஜை முடிந்த பின் தூபம், தீபம் காண்பிக்க வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணர் பலகாரப் பிரியர். எனவே பல ஆகாரங்களை அவருக்கு வைத்துப் படைத்து விட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்,. அதன் பிறகே நாமும் பிரசாதம் உட்கொள்ள வேண்டும். வெல்லச் சீடை, உப்பு சீடை, முறுக்கு, தேன்குழல், லட்டு, திரட்டுப்பால், அதிரசம், அப்பம், வடை, பாயசம், அவல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், தயிர் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

பழ வகைகளில் நாவல், கொய்யா, வாழை, விளாம்பழம் போன்றவற்றை நிவேதிக்கலாம். வீடுகளில் பாகவதம், கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், க்ருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம். பூஜை முடிந்த பின் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம்.

இரவில் கண் விழித்து கிருஷ்ணரின் கதைகளைக் கேட்கலாம். இயன்ற அளவில் அன்னதானம் செய்யலாம். கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், விவசாயம் போன்ற அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் இந்த தினத்தில் விரதம் இருப்பது உரிய பலனைத் தரும்.

Tags:    

Similar News