ஆன்மிகம்
குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு பவனி ரத்து: கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Published On 2021-03-25 11:20 IST   |   Update On 2021-03-25 11:20:00 IST
கொரோனா தொற்று தீவிரமாவதால் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை :

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகளும் நெருங்கி வருவதால், பொது இடங்களில் கூடுவதற்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஏப்ரல் 4-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் அதற்கு முன்னதாக 2-ந் தேதி புனித வெள்ளி போன்ற சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை பிடித்து பவனியாக இந்நாளில் செல்வது வழக்கம். ஆலயங்களை சுற்றியும், தங்கள் பகுதிக்கு உட்பட்ட தெரு வீதிகளிலும் குருத்தோலையை பிடித்து ஊர்வலமாக செல்லும் போது ‘ஓசன்னா’ என்று பாடல்களை முழங்கி செல்வார்கள்.

அடுத்த வாரம் முழுவதும் சிறப்பு நாட்களாக அனுசரிக்கப்படும். அதனால் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளும் வருவதால், அவற்றின் மூலம் தொற்று பரவக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கிறிஸ்தவ ஆலய மத போதகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆலயத்துக்குள்ளே இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்தி முடிக்க தலைமை போதகர்களிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபை மக்களை அழைத்து ஊர்வலமாக செல்ல வேண்டாம் என அனைத்து திருச்சபைகளுக்கும் அதன் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

அதனால் 2-ந் தேதி குருத்தோலை பவனி நிகழ்ச்சிகள் பெரும்பாலான ஆலயங்களில் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஆலயங்களில் சமூக இடைவெளி, கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், முககவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முககவசம் அணியாமல் கூட வேண்டாம். ஆலயம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் சுகாதாரத்துறை அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அனைத்து ஆலயங்களிலும் அறிவுறுத்தப்படுகிறது.

Similar News