தோஷ பரிகாரங்கள்

பிரச்சனை, திருமணத்தடை நீக்கும் விநாயகர் கோவில்கள்...

Update: 2022-09-27 07:12 GMT
  • உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
  • திண்டுக்கல் மேலக்கோட்டையில் ‘தலை வெட்டி பிள்ளையார்’ அருள்பாலித்து வருகிறார்.

திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் 'பெருநாட்டு பிள்ளையார்.' இந்தக் கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும். இந்தக் கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக் கண்டு தரிசித்தால் தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக்கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும். மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.

திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ளது, தீவனூர் கிராமம். இங்குள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும், இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். அரளி, சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சன்னிதிக்கு வந்து, குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர்கள் கோவில் இருக்கிறது. எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்து நன்மை அடைந்தவர்கள் ஏராளம். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் பெறலாம். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று 'உச்சிஷ்ட கணபதி'. ஒரு பெண்ணை அணைத்தபடி உள்ள வடிவம்தான் 'உச்சிஷ்ட கணபதி' வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச் சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் அமைந்தபோது, இவ்விநாயகர் கோவிலும் இருந்தது என்பதால், இவரை 'ஆதி விநாயகர்' என்கிறார்கள். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதகமும் வைத்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் சக்திபெற்றவர் இவர்.

Tags:    

Similar News