தோஷ பரிகாரங்கள்

குழந்தை வரம் கிடைக்க நாகர் சிலை பிரதிஷ்டை செய்யும் கோவில்

Published On 2022-06-30 05:53 GMT   |   Update On 2022-06-30 05:53 GMT
  • தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மக்கள், நாகர் சிலையை இங்கே வைத்து வணங்குகிறார்கள்.
  • ஜோதிட ரீதியாக நாகத்தால் ஏற்படும் பிரச்சினைகளை 'சர்ப்ப தோஷம்' என்கிறார்கள்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், மகாபாரதத்தின் மகா ஞானியான விதுரருடன் தொடர்புடைய ஒரு விசித்திரமான கோவில் உள்ளது. மகாபாரத யுத்தம் வராமல் இருப்பதற்காக விதுரர் கொடுத்த ஆலோசனையை, கவுரவர்களின் மன்னனான திருதராஷ்டிரர் புறக்கணித்தார். அதன் விளைவு, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குருசேத்திரப் போர். எண்ணிலடங்காத மரணங்களையும், துன்பங்களையும் அளித்த பிறகே போர் முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் பங்கேற்காத விதுரர், கிருஷ்ணரின் ஆலோசனைப்படி தனது மனதை அமைதிப்படுத்துவதற்காக தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அவர் இறுதியாக இந்தப் பகுதியில் உள்ள மைத்ரேய ரிஷியின் ஆசிரமத்தில் குடியேறியதாக கூறப்படுகிறது. அங்கு ரிஷியின் ஆலோசனைப்படி, விதுரர் 'அஸ்வதா' (அத்தி மரம்) மரக்கன்றுகளை நட்டு, அதை வணங்கும் நடைமுறையைத் தொடங்கினார்.

அதை அவர் தனது கடைசி நாள் வரை தொடர்ந்தார். இங்கு அமைந்த கோவில் 'விதுராஷ்வதா கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு அஸ்வதா மரத்தின் தண்டு இருப்பதை இன்றும் காணலாம். இந்த ஆலயத்தில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் பிரசித்திப் பெற்றது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மக்கள், நாகர் சிலையை இங்கே வைத்து வணங்குகிறார்கள்.

இப்படி வைக்கப்பட்ட நாகர் சிலைகளின் எண்ணிக்கையே இங்கு பல ஆயிரங்களைத்தாண்டும். இங்குள்ள புனிதமான அத்தி மரத்தின் கீழ்தான் இந்த நாகர் சிலைகள் வைத்து வணங்கப்படுகின்றன. ஜோதிட ரீதியாக நாகத்தால் ஏற்படும் பிரச்சினைகளை 'சர்ப்ப தோஷம்' என்கிறார்கள். பாம்புகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள், கடந்த கால வாழ்க்கையை சர்ப்பதோஷத்தோடு முடித்தவர்களுக்கு, தற்போது குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம் என்கிறது, ஜோதிடம்.

இந்த சர்ப்ப தோஷத்தை போக்கி, குழந்தை பாக்கியம் தரும் தலமாக, விதுராஷ்வதா ஆலயம் மாறியிருக்கிறது. நாக பிரதிஷ்டை செய்யப்படும்போது, அந்த சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுகிறார்கள்.

Tags:    

Similar News