தோஷ பரிகாரங்கள்

நீண்ட ஆயுளுடன் வாழ வழிபட வேண்டிய கோவில்

Published On 2022-07-20 05:27 GMT   |   Update On 2022-07-20 05:27 GMT
  • காலதேவனைக் காலால் உதைத்த திருத்தலம் இது.
  • அமிர்தமே லிங்கமெனத் திகழும் ஆலயம்.

திருக்கடையூர் எனும் அற்புதமான க்ஷேத்திரம், எம பயம் போக்கும் திருத்தலம். நீண்ட ஆயுளை வழங்கும் தலம். மார்க்கண்டேயனுக்கு அருள் வழங்கிய திருத்தலம்.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான முக்கியமான வைபவங்களை இங்கே நடத்தினால், அமிர்தகடேஸ்வரரின் பேரருளைப் பெறலாம். நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

காலதேவனைக் காலால் உதைத்த திருத்தலம் இது. தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனை, காலதேவனை, எமதருமனை சிவபெருமான் தண்டித்த திருத்தலம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கடையூர். வில்வாரண்ய க்ஷேத்திரம் என விவரிக்கிறது புராணம்.

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் பெருமான் என மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம். காவிரி வடகரை திருத்தலங்கள், தென்கரை திருத்தலங்கள் என பிரித்து கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில், காவிரி தென்கரைத் திருத்தலங்களில் 47வது திருத்தலம் இது. அமிர்தமே லிங்கமெனத் திகழும் ஆலயம். அதனால்தான் இறைவனுக்கு அமிர்தலிங்கேஸ்வரர் என்று திருநாமம். அம்பாளின் திருநாமம் அபிராமி அன்னை. அபிராமிபட்டரின் திருத்தலம் இது எனும் பெருமையும் உண்டு.

முக்கியமாக, அபிராமி அந்தாதி நமக்கெல்லாம் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த திருத்தலம் எனும் பெருமை மிக்க பூமி இது எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

எமதர்மன், சிவபெருமானை, தினமும் உபாஸிப்பவன். சிவ பக்தன். தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்புக்கு உரியவன் எமதருமன்!

சிவபெருமானின் திருவடிகள், தன் சிரசில் பட வேண்டும் என்று எமதருமன் ஆசைப்பட்டான். மனதார வேண்டினான். அந்த வேண்டுதல் நிறைவேற்றித் தர இறைவன் முடிவு செய்தார். அதற்கு சிவபெருமான், கருவியாக மார்க்கண்டேயனை ஆக்கிக் கொண்டார். மார்க்கண்டேயனின் ஆயுள் முடியும் தருணத்தில் எமதருமன் மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான். ஆனால், மார்க்கண்டேயன் சிவத் திருமேனியை, லிங்கத் திருமேனியைத் தழுவிக்கொண்டிருந்தான். அப்போது எமன் வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத் திருமேனியின் மீது பிணைந்ததுதான் சிவ விளையாட்டு.

அங்கே, தன் பக்தனான எமதருமனின் விருப்பத்தையும் நிறைவேற்றினார் சிவனார். மார்க்கண்டேயன் எனும் பக்தனையும் காத்தருளினார்.

அத்தகைய புண்ணிய திருத்தலமான, திருக்கடையூர்,

திருக்கடையூர் அபிராமி அன்னையை, அமிர்தகடேஸ்வரரை மனதார வேண்டுவோம். நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்கள் அம்மையும் அப்பனும்!

Tags:    

Similar News