தோஷ பரிகாரங்கள்

நவகிரக தோஷம் விலக சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திர பரிகாரம்

Published On 2022-09-02 05:33 GMT   |   Update On 2022-09-02 05:33 GMT
  • தஞ்சை வடக்கு வீதியில் உள்ளது ராஜகோபாலசாமி கோவில்.
  • இந்த கோவில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார். சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.

இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு அருளக்கூடிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் என கருதப்படுகிறது.

மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

சித்திரை நட்சத்திரம் அன்று இந்த கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். சித்திரை நட்சத்திரம் அன்று மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபடுவார்கள்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலும், தஞ்சை பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News