தோஷ பரிகாரங்கள்

நவக்கிரக தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை

Update: 2022-11-28 07:31 GMT
  • பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.
  • ‘நவ’ என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும்.

'பாஷாணம்' என்றால் 'விஷம்' என்று பொருள். 'நவ' என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி, உபயோகிக்கும் தன்மையை சித்தர்கள் பெற்றிருந்தனர். ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும், தனித்தனியாக வேதியியல், இயற்பியல்பண்புண்டு. சித்தர்கள், அதில் உள்ள அணுக்களை முறைப்படி பிரித்து மீண்டும் சேர்ப்பதை 'நவபாஷாணம் கட்டுதல்' என்பார்கள்.

1. சாதிலிங்கம், 2. மனோசிலை, 3. காந்தம், 4. காரம், 5. கந்தகம், 6. பூரம், 7. வெள்ளை பாஷாணம், 8. கவுரி பாஷாணம், 9. தொட்டி பாஷாணம் என்பதே 'நவ பாஷாணங்கள்' ஆகும்.

இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்திருப்பதாக சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை கட்டுதல் என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுவதாக நம்பிக்கை.

தமிழ்நாட்டில் பழனிமலை முருகன் கோவில், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் தேவிப்பட்டினத்தில் உள்ள ஒரு கோவில் ஆகிய மூன்று இடங்களில்தான் நவபாஷாண சிலைகள் இருக்கின்றன. இதில் பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை கொண்டிருப்பவை. நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள், நவக்கிரகங்களை ஒருங்கே வழிபட்டதற்கான பலன் கிடைக்கும். இதற்காகவே பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை, போகர் சித்தர் பிரதிஷ்டை செய்தார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய் கூட தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Tags:    

Similar News