தோஷ பரிகாரங்கள்

நல்லூர் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சுவாமி-அம்பாள்.

திருமணத்தடை நீக்கும் நல்லூர் கல்யாண சுந்தரர்

Published On 2022-11-24 06:14 GMT   |   Update On 2022-11-24 06:14 GMT
  • மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.
  • அம்பாளின் பெயர் கிரிசுந்தரி.

தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது. நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.

இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News