தோஷ பரிகாரங்கள்

மடப்புரம் பத்ரகாளி அம்மன் முன் காசு வெட்டிப் போட்டால் தீரும் பிரச்சனைகள்...

Published On 2022-06-18 05:04 GMT   |   Update On 2022-06-18 05:04 GMT
  • பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு.
  • இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.

காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.

மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்சனை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீசுக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான். காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும்.

பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்தபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும். இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுமாம் காளி. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.

இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக்கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள்.

இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள். காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது வீட்டில் குவா - குவா சத்தம் கேட்கிறது. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.

எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.

Tags:    

Similar News