தோஷ பரிகாரங்கள்

சென்னையில் உள்ள கேது பகவானுக்குரிய பரிகார தலம்

Published On 2023-02-01 07:30 GMT   |   Update On 2023-02-01 07:30 GMT
  • இங்கு எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.
  • இக்கோவிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.

சென்னை அருகே உள்ள போரூர் - குன்றத்தூர் சாலையில் உள்ளது கெருகம்பாக்கம். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது கேது பகவானுக்குரிய தலமாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனின் திருநாமம், நீலகண்டேஸ்வரர், அம்பிகையின் திருநாமம் ஆதிகாமாட்சியம்மை என்பதாகும். சுவாமி கருவறையின் வலது பக்கம் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.

இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணந்திருக்க, நடுவில் 'காளிங்க நர்த்தன கண்ணன்'போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.

ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. வெளிச்சுற்றில் கேது பகவான் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். புடைப்புச் சிற்பமாக இருக்கும் பின்னிப் பிணைந்த இரண்டு சர்ப்பங்களின் நடுவில் உள்ள நடன கோபாலன், கேதுவாக கருதப்படுகிறார்.

கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.

Tags:    

Similar News