தோஷ பரிகாரங்கள்

கண் திருஷ்டி, செய்வினை தோஷம் நீக்கும் கரிக்ககம் சாமுண்டி தேவி

Published On 2023-03-25 09:33 GMT   |   Update On 2023-03-25 09:33 GMT
  • தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
  • சிக்கலான வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.

'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள்.

அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.

நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் 'கறுப்புக் கயிறு' மந்தரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.

இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை 'சத்ரு சம்கார' (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்தசொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.

வழக்கைத் தீர்க்கும் அம்மன்

ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும் படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, 'இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்' என்றான்.

'யார் குற்றவாளி' என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.

'அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!' என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.

அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.

ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி தேவி ஆலயம்.

-பிரபா முத்துக்குமார், திருவனந்தபுரம்.

Tags:    

Similar News