தோஷ பரிகாரங்கள்

உத்தியோக ரீதியாக ஏற்படும் சங்கடங்களும்... இடர் தீர்க்கும் பரிகாரங்களும்...

Update: 2023-03-10 07:52 GMT
  • சிலர் தன் திறமையை கசக்கி பிழிந்தால் கூட முதலாளி அல்லது மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற முடிவதில்லை.
  • பலருக்கு உத்தியோக ரீதியாக பல விதமான சங்கடங்கள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன.

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது பழமொழி. சுய தொழில் தான் கவுரவம் என்ற நிலை மாறி உத்தியோகமே சமுதாய அங்கீகாரம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் சம்பாதிக்க துவங்கிய நாள் முதல் ஒய்வு பெறும் நாள் வரை ஒரே உத்தியோகத்தில் சாதனை படைக்கிறார்கள். சிலர் ஓய்வு காலத்திற்குள் பல வேலைகள் மாறி விடுவார்கள்.

சிலர் ஓய்வு காலத்திற்குப் பிறகும் ஓயாமல் உழைக்க வேண்டிய குடும்பச் சூழல், சிலர் வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் குருட்டு அதிர்ஷ்டத்தில் வாழ்வார்கள். சிலர் நல்ல தகுதியும் திறமையும் இருந்து படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் குடும்ப சூழ்நிலைக்காக கிடைத்த வேலையை செய்து வாழ்நாளை கழிக்கிறார்கள். சிலர் சொற்ப சம்பளத்தில் கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலையில் காலம் தள்ளுகிறார்கள். சிலர் தன் திறமையை கசக்கி பிழிந்தால் கூட முதலாளி அல்லது மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற முடிவதில்லை. இதுபோல் பலருக்கு உத்தியோக ரீதியாக பல விதமான சங்கடங்கள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடும் பரிகாரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

சனி

கால புருஷ 10-ம் இடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் உத்தியோகம், வேலை, பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோக பலன்கள் அனுபவிக்க வேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடும்.

ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே பதவி, உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சனி நல்ல நிலையில் இருந்தால் அடித் தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள்.

முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த லாபம் வரும்படியும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கவுரவம் இல்லாத, நீசத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளும் கஷ்ட ஜீவனமும் நிரம்பி இருக்கும்.

கேது

தான் நின்ற பாவகங்கள் மூலம் தடை, தாமதங்களை வழங்குவதில் முன்னணியில் நிற்பவர் கேது. அதாவது தான் நின்ற பாவக பலனை சுருக்கி விடுவார். ஒருவர் ஜாதகத்தில் கேது சுப வலிமையுடன் சுப கிரக சம்மந்தம் பெற்றால் எப்போதும் உஷாராக மூளை பலத்தால் எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள்.

பலம் இழந்தால் எதிலும் நிலையற்ற தன்மை, எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடங்கல், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகிய பலன்கள் மிகும்.

உத்தியோகத்தில் சுப பலன் வழங்கும் சச மகாயோகம்:-

சச மகா யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும். சனிபகவான் லக்னம் அல்லது ராசிக்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகும் இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல செல்வாக்கு மிக்கவராகவும் பூரண ஆயுள் கொண்டவராகவும் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெறக்கூடிய உத்தியோகத்தில் சாதனை படைப்பார்கள். இவரால் மற்றவர்களுக்கு நற்பலனும் கிடைக்கும். அதேபோல் இந்த யோகம் உள்ளவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல உத்தியோகம், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள்.

அரசாங்கத்தில் உயர் பதவி மற்றும் அரசாங்கத்தால் அனுகூல பலன் உண்டு இந்த யோகம் வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்தால் சனிதிசையில் இந்த யோகம் சிறப்பான பலனை ஏற்படுத்தி தரும். இந்த யோகம் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்திற்கு முழுபலனையும் தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பலனும் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய லக்னத்திற்கு சனி மற்றும் சந்திரனின் யோகத்தின் பலம் மற்றும் தன்மைகேற்ப பலனை செய்யும். இந்த யோகம் சுய ஆதாய நோக்கத்தோடு இல்லாமல் இருப்பவரை மட்டும் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

உத்தியோகத்தில் இடர் தரும் சனி + கேது சேர்க்கை ஒருவரின் சுய ஜாதகத்தில் உத்தியோகத்தை வழங்கக்கூடிய சனி பகவானுக்கு, தடை, தாமதம், காரிய பிரதிகூலம் வழங்கும் கேது சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் எதை செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான உத்தியோக தடையை ஏற்படுத்தும்.

வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும். உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். சொந்த ஊரில் பூர்வீகத்தில் பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும் ஏற்படுத்தும்.நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை செய்பவர்களுக்கு கிரக சேர்க்கை இருக்கும். வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமலும் சூதாட்டம், திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்படுத்தும்.நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல் வருமானம் இல்லாமல் இருப்பார்கள்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் தன ஸ்தானம் எனும் இரண்டாமிடமும், உத்தியோக ஸ்தானம் எனும் ஆறாமிடமும் கர்ம ஸ்தானம் எனும் பத்தாம் இடமும் கர்ம காரகன் சனி பகவானும் சுப வலிமை பெற்றால் உழைப்பிற்கும், திறமைக்கு தகுந்த வேலை சம்பள உயர்வும் பதவி உயர்வு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் தன ஸ்தானம் எனும் இரண்டாமிடமும், உத்தியோக ஸ்தானம் எனும் ஆறாமிடமும் கர்ம ஸ்தானம் எனும் பத்தாம் இடமும் கர்ம காரகன் சனி பகவானும் அசுப வலிமை பெற்றால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் இருப்பார்கள். ஆனால் பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் ஒருவரே செய்வார்கள். ஆனால் அதற்கான அங்கீகாரம் இருக்காது. முன்னேற்றம் இருக்காது. இவர்கள் கண்ணெதிரே நேற்று வேலைக்கு சேர்ந்தவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் எல்லோரும் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெற்றுக்கொண்டு மேலே முன்னேறி சென்று விடுவார்கள். ஆனால் எல்லா வேலையும் திறம்பட செய்யத் தெரிந்த இவர்கள் எந்த முன்னேற்றம் இல்லாமல் இருப்பார்கள்.

பரிகாரம்

உளவியல் ரீதியாக உத்தியோக இடர் என்ற பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் உத்தியோகத்தை முதன்முதலில் தேர்ந்தெடுக்கும் போதே தங்களின் ஜாதகத்துக்கு தகுந்தவாறு சரியான உத்தியோகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப கஷ்டத்திற்காக கிடைக்கும் வேலையை அனுசரித்து பணிபுரிய துவங்கும் போது முன்னேற்றம் குறைவுபடும். படிப்பிற்க்கு தகுந்தவாறு உத்தியோகம் கிடைக்காமல் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 6-7 மணிவரையான சனி ஓரையில் பசு மாட்டிற்கு 6 மஞ்சள் வாழைப்பழம் தர வேண்டும். உத்தியோகத்தில் வேலைச்சுமை மிக அதிகமாக இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 9- 10.30 மணி வரையான ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

எந்த உத்தியோகமும் கிடைக்காமல் இருப்பவர்கள் சனிக்கிழமை இரவு 8-9 மணிவரையான சனி ஓரையில் 27 வாரம் தொடர்ந்து சிவ வழிபாடு செய்து வர கைமேல் பலன் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் உருப்படியாக ஒரு வருடத்திற்கு மேல் வேலையில் நிலைக்க முடியாமல் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 7 - 8 மணி வரையான குரு ஓரையில் அந்தணர்களுக்கு குறைந்தது ஒரு கிலோ பச்சரிசி 11 வாரம் தானம் தர வேண்டும்.

எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருப்பவர்கள் அல்லது உத்தியோகத்தில் தேவையில்லாமல் சக பணியாளர்களால் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படுபவர்கள் சனிக்கிழமை பகல் 1.30 - 3 மணி வரையான எம கண்டத்தில் விநாயகரை வீட்டில் இருந்தே வழிபடவும்.

உயர் அதிகாரிகளிடம் மிகுதியான கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை பகல் 1- 2 மணி வரையான சனி ஓரையில் 9 பேருக்கு தயிர் சாதம் வழங்கவும். மாதம் 1 முறை வழங்கவும். பதவி உயர்வு கிடைக்காமல் ஒரே பதவியில் பல வருடம் இருப்பவர்கள் அல்லது பல வருடங்களாக பதவி உயர்வு தடைபடுபவர்கள் சனிக்கிழமை காலை 9-10 வரையான சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடவும். 9 வாரம் செய்ய வேண்டும்.

ஊதிய உயர்வு கிடைக்காதவர்கள் அல்லது உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காதவர்கள் சனிக்கிழமை காலை 8-9 குரு ஓரையில் ஆன்மீக குருமார்களிடம் அல்லது வயது முதிர்ந்த பெரியோர்களிடம் நல்லாசி பெற வேண்டும். முதலாளி தொழிலாளி இடையே கருத்து வேறுபாடு மிகுதியாக இருப்பவர்கள் அல்லது நிலையான நல்ல வேலையாட்கள் அமையாதவர்கள் சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவ தரிசனம் செய்ய வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News