தோஷ பரிகாரங்கள்

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து?

Published On 2023-06-24 08:45 GMT   |   Update On 2023-06-24 08:45 GMT
  • ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார்.
  • கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.

ஏழரை சனியும் அஷ்டமத்து சனியும் ஒரு மனிதனை ஆட்டி படைத்து விடும். கண்டச்சனியும் அர்த்தாஷ்டம சனியும் மனிதர்களை அசர வைத்து விடும். சனியால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால் போதும் சனிபகவானை சந்தோஷப்படுத்த முடியும்..அள்ளிக்கொடுப்பாராம் சனிபகவான்.

ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார். ராசிக்கு 12ஆம் வீட்டில் வரும் போது விரைய சனியாகவும் ராசியில் அமரும் போது ஜென்ம சனியாகவும், ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமரும் போது பாத சனியாகவும் மொத்தம் ஏழரை ஆண்டு காலம் உலகத்தின் உண்மை நிலையை உணர வைத்து விடுவார். அதே போல சனி பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமரும் போது கண்டச்சனியாகவும்..8ஆம் வீட்டில் அமரும் போது அஷ்டமத்து சனியாகவும் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பலன்களைத் தருவார் சனிபகவான்.

நம்முடைய ஜாதகத்தில் எத்தகைய சனி நிகழ்ந்தாலும் நம்முடைய வினை பயன் மூலமே நன்மையோ தீமையோ நிகழ்கிறது. ஜாதகத்தில் என்ன வகையான சனிகள் இருக்கின்றன.. அவை என்னவெல்லாம் பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பதைப்பற்றி தான் நாம இந்தக் கட்டுரையில் பார்க்கப்போறோம்.

ஏழரை சனி

ஏழரை சனி என்பதனை தோஷமாக கருதுவது தவறு என்பதனை நாம் முதலில் உணர வேண்டும். ஏழரை சனியை ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று முறை சந்திப்பார்கள். 22 வருடங்களுக்கு ஒருமுறை ஒருவருடைய ஜாதகத்தை ஏழரை சனி ஆட்சி செய்கிறது. இந்த சனி காலத்தில் சிறு சிறு தடங்கல்கள் மட்டுமே ஏற்படுமே தவிர, பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது தற்காலிகமே தவிர நிரந்தரமானது இல்லை. ஏழரை சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்தை சிறிய தடைகள் மூலம் தடுத்து நிறுத்துவதே ஏழரை சனியின் வேலையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சனிபகவான் ஆட்சி செய்யும் போது ஏழரை சனியானது பிறக்கிறது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து எள்ளுபொடி கலந்த தயிர் சாதத்தைக் காக்கைகளுக்கு படைத்துவர ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஜென்ம சனி

ஜென்ம சனி என்பது, ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார்போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு. ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுபடுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தஷிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாத்தி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

அஷ்டம சனி

அஷ்டம சனி என்பது, முன் ஜென்மத்தில் ஒருவர் செய்யும் வினைகளைப் பொறுத்து சனி பகனான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பதாகும். வயதிற்கேற்ப அஷ்டமத்து சனி பிரச்னைகளைக் கொடுக்கும். அந்த வகையில், 4 முதல் 15 வயதுள்ளோருக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள் மற்றும் 40 வயட்திற்குட்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும் என்றும் கூறுகிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அஷ்டமத்து சனியில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.

அர்த்தாஷ்டம சனி

அர்த்தாஷ்டம சனியானது சனிபகவான் ராசியின் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பிறக்கிறது. பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும் சனியாகும். தொழில் பாதையை இச்சனியானது பார்ப்பதனால் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். இச்சனியின் தாக்கத்தை தாங்குவதற்கு ஞாயிற்றுகிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரையும் சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்றும் வழிபடுதல் வேண்டும்.

கண்டக சனி

கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள். குரல்வளையை இறுகப்பிடித்தால் நாம் எப்படி திணறுகிறோமோ அதே போல் ராசியில் ஏழாம் இடத்தில் வரும் இந்த கண்டக சனியால் வரும் இடர்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

Tags:    

Similar News