தோஷ பரிகாரங்கள்

ஆடி அமாவாசை... இன்று மறக்காமல் செய்ய வேண்டிய தானங்கள்

Published On 2022-07-28 05:05 GMT   |   Update On 2022-07-28 05:05 GMT
  • வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
  • அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.

எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காாியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.

இன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.

Tags:    

Similar News