தோஷ பரிகாரங்கள்
மண்டகொளத்தூர் கோவில் போளூர்

போளூர் மண்டகொளத்தூரில் பிரமஹத்தி தோஷம் நீக்கும் தர்மநாதேஸ்வரர்

Published On 2022-04-27 14:25 IST   |   Update On 2022-04-27 14:25:00 IST
போளூர் மண்டகொளத்தூர் சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், தென் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது. இதில் சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோவில் போளூர் அருகே உள்ளது. பார்வதிதேவி திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாக காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது.

இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.

தற்போது மண்டகொளத்தூர் கோவிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.

போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.

Similar News