ஆன்மிகம்
தேவசகாயம்

அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாள் வருகிற 3-ந்தேதி அறிவிப்பு

Published On 2021-04-19 10:20 IST   |   Update On 2021-04-19 10:20:00 IST
அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான நாள் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி அறிவிக்கப்படுகிறது. ரோம் நகரில் கர்தினால்களுடன் நடைபெறும் கூட்டத்தில் போப் ஆண்டவர் முடிவு செய்கிறார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி வாசுதேவன் நம்பூதிரி-தேவகியம்மா தம்பதிக்கு மகனாக தேவசகாயம் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இணைந்த பின்பு தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக்கொண்டார். கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி அப்போதைய ஆட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவருக்கு 22-12-2003- அன்று இறையூழியர் பட்டமும், 8-5-2012-ல் அருளாளர் பட்டமும் வழங்கப்பட்டது. இதையடுத்து தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 28-2-2019-ல் இவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையெழுத்திட்டார். இதையடுத்து புனிதராக அறிவிக்கும் நாள் அறிவிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் 3-ந் தேதி ரோம் நகரில் நடக்கிறது.

இதுதொடர்பாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறியிருப்பதாவது:-

அருளாளர் தேவசகாயம் புனிதர் பட்டத்திற்காக காலம் காலமாக காத்திருக்கும் பக்தர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தியாக திருத்தந்தை (போப் ஆண்டவர்) பிரான்சிஸ் நமக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ரோம் நகரின் வத்திக்கான் மாளிகையில் கர்தினால்கள் வழக்கமாகக் கூடும் அறைக்கு கர்தினால்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைத்துள்ளார்.

கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதாவது நம் அருளாளர் தேவசகாயம் மற்றும் இவரை போன்ற 7 அருளாளர்களை அகில உலகம் போற்றும் மாபெரும் புனிதர்களாக பிரகடனப்படுத்துவதாகும்.

அதன்படி வருகிற 3-ந்தேதி நடைபெறும் கர்தினால்கள் கூட்டத்தில் அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றிய அனைத்து முடிவுகளையும் ஆய்வு செய்து அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

கொரோனா தொற்று நோயால் உலகம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதால் வழக்கம்போல் ரோமை நகர பேதுரு பேராலயத்தின் முன்வளாகத்தில் பெரும் விழாவாக நடைபெறும் புனிதர் பட்ட நிகழ்வு இந்தாண்டு எளிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 3-ந் தேதி நடைபெறும் கர்தினால்கள் கூட்டம் நாம் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் நம் மறைசாட்சியை அகில உலகமும் போற்றிக் கொண்டாடும் மாபெரும் புனிதராக அறிவிக்கட்டும். இந்த மகிழ்ச்சியான செய்தியின் எதிரொலி உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தட்டும்.

இவ்வாறு ஆயர் நசரேன் சூசை தெரிவித்துள்ளார்.

Similar News