ஆன்மிகம்
பேராலய வளாகத்தில் நடந்த புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2021-04-03 08:34 IST   |   Update On 2021-04-03 08:34:00 IST
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரமாக கடந்த 28-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஏசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியை யொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி ஆலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் ஆகியோர் சிலுவை ஆராதணை செய்தனர்.

ஆண்டு தோறும் புனித வெள்ளி அன்று ஏசு சிலையின் பாதத்தை பங்கு தந்தைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து கலையரங்கத்தில் இருந்து ஏசு சிலை ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. அபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையை ஆராதணை செய்தனர். பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக மேல்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்லினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News