ஆன்மிகம்
வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தபோது எடுத்தபடம்.

வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்

Published On 2021-03-01 09:26 IST   |   Update On 2021-03-01 09:26:00 IST
தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.இந்த ஆலயமானது வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் அழைத்து வருகின்றனர்.

இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் இறைச்சி உண்ணாமல் இருந்து 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி தவக்காலம் தொடங்கியது. இந்த தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருந்து 35 பேர் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்தனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

Similar News